மாஸ் காட்டிய கோலி – ஜட்டு ஜோடி : நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி நியூசிலாந்தை  வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.…

விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி நியூசிலாந்தை  வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதி வருகின்றன.
நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. சம பலம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இரு அணிகளும் இன்று இமாச்சல் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக நியுசிலாந்து அணியின் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். கான்வே வந்த வேகத்திலேயே முகமது சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியெறினார்.
17 ரன்களில் வில் யங்கும் ஷமியின் பந்தில் போல்டாகவே அவரும் வெளியெறினார்.

இதனையடுத்து அணி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. அதிகபட்சமாக ரச்சின் 75 ரன்களும் மிட்செல் 137ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்களையும் இழந்து 273ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் முகமது சமி 10 ஓவர்களில் 54 ரன்களை கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ்  2 விக்கெட் மற்றும் சிராஜ் , பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கமே சிக்சர் மற்றும் ஃபோர்களுக்கு பந்தை பறக்க விட்டார் ரோஹித் சர்மா.  46 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் 15.4 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த நிலையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி , ஸ்ரேயாஷ் அய்யர் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் 27ரன்களில் ஆட்டமிழக்க சூர்ய குமார் யாதவ் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து விராட் கோலி – ரவீந்திர ஜடேஜா ஜோடி இணைந்தது.  இந்த நிலையில் 269 ரன்கள் இருந்த நிலையில் விராட் கோலி 104 பந்துகளில் 95 ரன்கள் எடுத்த நிலையில் சிக்ஸிற்கு பந்தை அடித்த போது அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனைத் தொடர்ந்து  ஜடேஜா – முகமது ஷமி ஜோடி சேர்ந்தது.  இறுதியாக 4 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஜடேஜா பந்தை பவுண்டிரிக்கு விளாசினார் இதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. ஜடேஜா 44   பந்துகளில் 39 ரன்களை எடுத்தார்.   இந்தியா 48ஓவர்களில் 4விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.