நடிகர் நானியின் 31வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நானி. தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் வழக்கமான தெலுங்கு பாணி படங்களை தவிர்த்து தொடர்ந்து ஜெர்ஸி, கேங் லீடர், ஷ்யாம் சிங்கா ராய் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடந்து நானியின் 30-வது படத்தை இயக்குனர் சவுரவ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ள நிலையில், வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஹாய் நான்னா என படக்குழு தலைப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் நானியின் 31வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கிறது. மேலும் அடடே சுந்தரா படக்குழுதான் இப்படத்தையும் இயக்குகிறது. இப்படத்தின் மூலம் அடடே சுந்தரா படக்குழுவுடன் நானி இரண்டாவது முறையாக இணைகிறார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.

நடிகர் நானியின் 31வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் இணைந்துள்ளார். எஸ்ஜே.சூர்யா பிரியங்கா மோகன் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.
அண்மையில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் நானி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நானி – எஸ்.ஜே,சூர்யா காம்போவில் உருவாகும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.







