மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்ததால் உயிரிழந்த சிறுமி!

மொட்டைமாடியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பெய்த…

மொட்டைமாடியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பெய்த மழையால், சிட்லபாக்கம் புறநானூறு தெருவைச் சேர்ந்த சசிகலா என்பவரது வீட்டு மொட்டை மாடியில் மழை நீர் தேங்கியிருந்தது. அப்போது வீட்டின் அருகேயுள்ள மின்னழுத்த கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது.

இந்நிலையில் மழை நின்றவுடன் மாடிக்கு சென்ற சிறுமி சஞ்சனா தேங்கி நின்ற மழை நீரில் மிதித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது சஞ்சனா சுயநினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சஞ்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். மின்சாரம் தாக்கி 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.