சென்னையில் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், ஜெயரஞ்சனுக்கு விவசாய கொள்கை மற்றும் திட்டமிடுதல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட அக்குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் குறித்தும், ஒவ்வொருவருடைய கருத்து என்ன என்பது குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் மாநில வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டுவது குறித்து பணிகளை மேற்கொள்ளுமாறு அக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.







