ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…

காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் பகுதிகளில், அங்கு நிலவும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப மிளகாய் நன்கு வளரும். பாரம்பரிய ரகமான ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்ற சம்பா இரகங்களை காட்டிலும் கூடுதல் விளைச்சல் கொடுப்பதால் அங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மழையின் அளவு அதிகரிக்கும் போது, மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கும். மழையளவு குறைவாக இருக்கும் போது மட்டுமே சாகுபடி செய்ய முடியும். விவசாயிகளுக்க “ராமநாதபுரம் குண்டு” மிளகாய் அதிக வருமானத்தை கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு மிளகாய் சாகுபடிக்கான செலவு ரூ.10,000 என்றால்,அதற்கான வருமானம் ரூ.30,000 ஆக இருக்கும் . அப்பேற்பட்ட இந்த குண்டு மிளகாய்க்கு தற்போது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு என்று புவிசார் குறியீட்டை வழங்கி வருகிறது. 1999-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த புவிசார் குறியீட்டு சட்டம் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

புவிசார் குறியீடு என்பதன் முக்கிய நோக்கமே, தனித்தன்மை வாய்ந்த ஒரு பொருளுக்கென்று மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பிறகு, சம்மந்தப்பட்ட அந்த பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலியாகவோ பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதுதான். இதுபோல தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்ற ஏற்கனவே 43 பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது 44 -வதாக காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் 45 -வதாக வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதி விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் குண்டுமிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் குண்டு மிளகாய்க்கு அதிக விலை கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Gundu Molzuka - YouTube

மேலும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குறித்து பேசும் போது காரத்தன்மை அதிகம் கொண்ட குண்டு மிளகாய் சாகுபடியில் ராமநாதபுரம் மாவட்டம் தான் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனால் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது எங்களது கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உலக அளவில் எளிதாக வர்த்தகம் செய்ய கூடிய சுழலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இதேபோல் வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே இலவம்பாடி, ஒடுக்கத்துார், குருவராஜபாளையம் ஆகிய பகுதிகளில், முள்ளுக்கத்திரிக்காய் பயிரிடப்படுகிறது. இந்த வகை கத்தரிக்காயை சிக்கன், மட்டன் பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள தயாரிக்கப்படும் ‘தால்சா’விற்கு அதிகம் பயன்படுத்துவர். தற்போது இந்த வேலூர் முள்ளு கத்திரிக்காய்க்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புவிசார் குறியீட்டிற்கான சான்றிதழ் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்படும்.அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் ஏற்கனவே 46 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று கர்நாடக மாநிலம் முதலிடத்திலும், 45 பொருட்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.