தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கொடிகட்டிப் பறப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். காவல்துறை இதனை கண்டும் காணாத வகையில் இருப்பதால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைச்செய்தி: திமுக எம்.எல்.ஏ எப்படி வரலாம்; மேடையில் அதிமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை, இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழிக்கிறது என்பதற்கு இக்காட்சிகளே உதாரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி போதைப் பொருள் ஒழிப்பை உண்மையான அக்கறையோடு காவல்துறை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும் காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் இதனை கவனிப்பாரா? என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








