திமுக எம்.எல்.ஏ எப்படி வரலாம்; மேடையில் அதிமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்

அரசு பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா தாசிரியப்பனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக…

அரசு பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா தாசிரியப்பனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் கலந்துகொண்டார்.இந்த தகவல் அறிந்த அதிமுக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அப்பள்ளிக்கு வந்தார்.

அப்போது விழா மேடையில் இருந்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார், தேவராஜ் ஆகியோரிடம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எப்படி வந்திருக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து திமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை விழா மேடையில் அமரச் சொல்லி சமரசம் பேசினார். இருப்பினும் மேடையில் இருந்து அதிமுக கட்சி தொண்டர்களுடன் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவர்கள் முன்னிலையிலேயே விழா மேடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் திமுக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவை நடத்தி முடித்து விட்டு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.