ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த திரிபுரா இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, புரசைவாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜூவல் ஹுசைன், ஜூவல் இஸ்லாம் ஆகிய இருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பிடித்து வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வேப்பேரி போலீசார் 2 பேரையும் கைது செய்து இருவரிடமும் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அகர்தாலா – பெங்களூர் விரைவு ரயில் கேண்டீனில் பணிபுரியும் பிண்டு (35) தங்களிடம் கஞ்சா கொடுத்து விற்கச் சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவரிடம் இருந்தும் 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து வேப்பேரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, சென்னை வில்லிவாக்கத்தில் குட்கா மொத்த விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கார், இரண்டு இருசச்கர வாகனங்கள், ரூ. 3.60 லட்சம், 45 கிலோ குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், திருமங்கலம், அண்ணாநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்காவை சிறு கடைகளுக்கு சப்ளை செய்து வந்த முகமது ரில்லிவான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா








