கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’  என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கும்பல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்…

‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’  என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்பல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அளிக்கவும்,  இது தொடா்பாக உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவை மாநிலங்கள் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய பெண்களின் தேசிய கூட்டமைப்பு  மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய்,  அரவிந்த் குமாா் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  இதனைத் தொடர்ந்து, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா,  ‘ சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவம் நடந்தது. அப்போது, பசுக் காவலா் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாமல்,  பாதிக்கப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்தனா்.  இதேபோன்று ஹரியானாவில் கும்பலால் தாக்கப்பட்ட மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனர்.

கும்பல் வன்முறைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மறுக்கப்படுகிற நிலையில்,  2018-ஆம் ஆண்டில் இது தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரரை எப்படி பின்பற்ற முடியும்’ என்று தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து,  நீதிபதிகள், ‘லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட இறைச்சி மீது ரசாயன ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மீது மத்திய பிரதேச போலீசார் எவ்வாறு வழக்குப் பதிவு செய்தனா்.

அவா் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.  யாரைகாப்பாற்ற முயற்சிக்கிறீா்களா?’ என,  மத்திய பிரதேச அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்ஞரிடம் கேள்வி எழுப்பினா்.  தொடர்ந்து, ‘இந்த விவகாரம் தொடா்பாக சில மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

எனவே,  கும்பல் வன்முறை,  பசுக் காவலா் சம்பவங்கள் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரம்,  ஒடிசா,  ராஜஸ்தான்,  பீகாா்,  மத்திய பிரதேசம், ஹரியானா மாநில டிஜிபிகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.