“மத்தியில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

மத்தியில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.   நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நாளை மறுநாள் முதல் ஜூன் 1 வரை நடக்க…

மத்தியில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நாளை மறுநாள் முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.  பின்னர்,  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால்,  இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  சேலத்தில் அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.  இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

” 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்,  டீசல் விலை குறைக்கப்பட்டது.  ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல்,  டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.  2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்யாவசியப் பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்குவதில்லை.  இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை.  மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே தமிழ்நாடு வருகின்றனர்.  மாநில பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை.  திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.  அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும்.  மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ” என்றார்.

மேலும் “இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  “தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம்.  உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.