விநாயகர் சிலைக்கு காவலாக இருந்த நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 22 வயதான ராஜி (எ)ராஜேஷ் கண்ணா என்ற மகன் உள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இரவு நேர காவலாக ராஜேஷ் கண்ணா, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஆல்பாட் ஆகியோர் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு ‘XYLO’ காரில் வந்த வல்லம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் விநாயகருக்கு காவலில் இருந்த ராஜேஷ் கண்ணாவை சிலை அருகே வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் கண்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் ஆல்பட் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். விநாயகருக்கு காவலில் இருந்த நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







