தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 1-ந் தேதி (இன்று) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை டு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி- புதுச்சேரி- திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி- கிருஷ்ணகிரி- தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.







