தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்

காங்கிரஸ் கட்சியில் தாங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ்…

காங்கிரஸ் கட்சியில் தாங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அப்படி  என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடந்த 1998ஆம் ஆண்டிற்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக  தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி தமது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடைடயே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு  குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் ஜி23 என்ற அழைக்கப்படும் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சோனியா காந்திக்கு திறந்த மடல் ஒன்றே அப்போது எழுதினர். அதில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற வேண்டுமென்னால் காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கோடிட்டு காட்டினர். இதுதான் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தலை ஆகஸ்டு மாதம் (இம்மாதம் ) தொடங்கி செப்டம்பர் 20க்குள் நடத்தி முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் குரல் கொடுத்து வந்தனர். ஆனால் ராகுல் காந்தி தற்போது மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் தமது உடல்நிலையை காரணம்காட்டி தமக்கு தலைவர் பதவி வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 1998ஆம் ஆண்டிற்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. நேரு குடும்பத்தை சாராத ஒருவர் என்றால், அது யாராக இருக்கும் என்ற கேள்வி பல்வேறு மட்டங்களில் காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது. அந்த வகையில் ப.சிதம்பரம், அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மீராகுமார் பெயர்கள் அடிபடுகின்றன.

இருப்பினும் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியை தலைவராக கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்கு பிரியங்கா காந்தி சம்மதிப்பாரா ? என்பது கேள்வி குறிதான் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ஜி23 தலைவர்கள் தங்களில் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளராக நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அடுத்த வாரம் கூடவுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து அக்கட்சி தேர்தலுக்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. நாடு முழுவதுமுள்ள 14 ஆயிரம் மாநில பிரதிநிதிகளால் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.