சென்னையில் ஜி – 20 மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர கடைகளை மூன்று நாட்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி-20 குழுவின் 18வது மாநாடு 2023 செப்டம்பர் மாதம் இந் தியாவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் தயார் செய்ய தொடங்கியுள்ள நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் சென்னை,திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட நான்கு இடங்களில் நடத்துவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த துணை மாநாடுகளையும் செப்டம்பர் மாதம் நடைபெறும் உச்சி மாநாட்டையும் நடத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனையும், மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து திமுக சார்பில் அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா தலைமையேற்று நடத்தவுள்ள ஜி-20 மாநாடு மற்றும் அது தொடர்பான கருத்தரங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும், ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த மாத இறுதியில் ஜி- 20 மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வருகை தரக்கூடும். எனவே மாமல்லபுரம் கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் , வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சாலையோர கடைகளை மூன்று நாட்கள் அகற்ற வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜனவரி 30 ,31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய தேதிகளில் சாலையோரத்தில் செயல்படும் கடைகளை அகற்ற வேண்டுமென வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜி- 20 உச்சி மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதிநிதிகள் பிப்ரவரி 1ம்
தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள்
கைவண்ணத்தில் செதுக்கிய கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்கின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.