முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் வருவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கடைகள், அத்தியாவசிய கடைகளுக்கு மற்றும் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் சுமார் 1 லட்சம் காவல் துறையினர் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
இந்த அறிவுரைகளைப் பின்பற்றாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதலே ஏராளமானோர் வாகனங்களில் சென்று வந்ததையும், அதிகப்படியான மக்கள் நடமாட்டத்தையும் காண முடிந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி கொரோனா தீவிரமாக பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி தமிழக காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.







