பிரான்ஸ் நாட்டில் இருந்து மாமல்லபுரத்தில் குடியேறி வசித்து வந்த ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ் என்பவர் கடல் அலையில் சிக்கி பலியானார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா பயணியாக வந்தவர் ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ். நீண்ட நாட்கள் மாமல்லபுரத்தில் தங்கி இருந்த இவர், வடக்கு மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 66 வயதான அவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அங்கேயே வசித்து வந்தார். மேலும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் நாட்டிலைட் என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் ஒன்றையும் ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மாலையில் அவர் மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் மீனவர்களின் உதவியுடன் அவரது உடலைத் தேடி வந்த நிலையில், அவரது உடல் கரை ஒதுங்கியது. அவ்வுடலைக் கைபற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– சௌம்யா.மோ






