சபாஷ் சரியான போட்டி என்ற வில்லன் நடிகர் வீரப்பாவின் எக்காள சிரிப்பு இடம்பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே பாடலை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?…

கொத்தமங்கலம் அருகே பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் பிறந்த சுப்பிரமணியன் என்ற சுப்பு அன்றைய நாளில் தமிழ்த்திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் கள நாயகனாக விளங்கினார். ஜெமினி நிறுவன திரைப்பட இலாகாவிலும், நடிகராகவும் வாசன் நடத்திய ஆனந்த விகடனில் எழுத்தாளர் என பிரகாசித்தவர் சுப்பு.
1953 ஆம் ஆண்டில் அவ்வையார் திரைப்படத்தை சுப்பு இயக்க. கே.பி. சுந்தராம்பாள் அவ்வையாராக நடித்தார். திரைப்படங்களை பார்த்திராத, மூறிஞர் ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார்.. ஔவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோர். “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” என பாராட்டினர்.

ஆனந்த விகடனில் எழுதி வந்த தில்லானா மோகனாம்பாள் நாவல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதனை திரைப்படமாக தயாரிக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனருமான எஸ்.எஸ் வாசன் திட்டமிட்டார். புராண படங்களை இயக்கிய ஏ.பி. நாகராஜன் சமூக படத்தை இயக்க முடியுமா என அந்நாளில் விமர்சனங்கள் எழ, அதனை கேள்விப்பட்ட ஏ.பி. நாகராஜன், தில்லானா மோகனாம்பாள் கதை உரிமையை வாசனிடம் கேட்டுப் பெற்றார். நீண்ட இழுபறிக்குப்பின் தில்லானா மோகனாம்பாள் திரைப்படமானதும் நாகராஜன், பெரும் புகழ் பெற்றார். மூலக்கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெருந்தொகை வழங்கினார் ஏ.பி நாகராஜன் என்பது தெரிந்த கதைதான்.

பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் , பத்திரிகையாளர், துணைஆசிரியர், நாடக நடிகர் என பன்முகங்கள் கொண்ட சுப்பு பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான தில்லானா மோகனாம்பாள் தொடரை ஆனந்த விகடனில் எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, இத்தனை புகழ் இருந்தும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலால் சுப்பு இன்றும் கொண்டாடப்படுகிறார்.







