அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எதிரான அனிய செலாவணி மோசடி வழக்கில், விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து, மூன்று வாரங்களில் தாக்கல் செய்யுமாறு, அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வேஸ்மெண்ட் மூலமாக டெபாசிட் செய்ததாகவும், அந்த வங்கியில் முறைகேடான முறையில் அந்த பணம் வைப்பு தொகையாக வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து 1996-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்த நிலையில், மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான, குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க அமலக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் தொடர்ந்த வழக்கை
விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை டி.டி.வி.தினகரனுக்கு வழக்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க இயலாது என அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அமலக்கத்துறையின் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், முதலில் வழக்கு தொடர்பான ஆவணங்களில் உள்ள விஷயங்கள் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை தாங்கள் பார்க்க விரும்புவதாகவும், எனவே வழக்கின் விசாரணை தொடர்பான விவரங்களை சிலிடப்பட்ட கவரில் மூன்று வாரத்தில் தாக்கல் செய்யுமாறு அமலக்கத்துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை வரும் ஏப்ரல் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.