நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக வின் சார்பில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக பிரிந்து இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. அமமுக கட்சியின் சார்பிலும் தனித்து போட்டியிட போவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் அமமுக சார்பில் வேட்பாளரை அறிவிக்காமலேயே குக்கர் சின்னத்திற்கு அக்கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில் மன்னார்குடியில் பத்திரிக்கையாளரை சந்தித்த வி.கே சசிகலா கூறியதாவது…
”இரட்டை இலை சின்னத்தை எந்த காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன். சில பேரை எடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.
பொதுச் செயலாளர் என்கிற பதவியை வழங்கக் கூடிய இடத்தில் எங்களது கட்சித் தொண்டர்கள் தான் இருக்கிறார்கள். திரும்ப திரும்ப அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி சொல்லும்போது கட்சித் தொண்டர்களை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஏனெனில் இந்த பதவி குறித்து எங்களது நிறுவனத் தலைவர் அதன் விதிகளை முறையாக ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.
ஓபிஎஸ் ம் இபிஎஸ் ம் செய்கிற நடவடிக்கையில் திமுக விற்கு தான் சாதகமாக உள்ளது. அதனால் ஒழுங்காக ஒருவருக்கு ஒருவர் குறைகூறுவதை விட்டுவிட்டு இணைந்து செயல்பட்டு தீய சக்தியான திமுக வீழ்த்த வேண்டும் என்பதே என்னுடைய மற்றும் கட்சித் தொண்டர்களின் கோரிக்கை” என வீ.கே.சசிகலா தெரிவித்தார்.