மேகாலயா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியானது.
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதியானது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சின்ஷர் குபர் ராய் தபா 16,679 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
ஒடிசா மாநிலம் ஜார்சுகூடா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபாலி தாஸ் 1,07,198 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தங்கதர் திருப்பதியை ஏறத்தாழ 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தீபாலி தாஸ், அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சான்பே மற்றும் சுவார் ஆகிய தொகுதிகளுளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சுவார் தொகுதியில் போட்டியிட்ட அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் ஷஃபீக் அஹமது அன்சாரி 68,630 வாக்குகள் பெற்று, எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் அனுராதா சவுகானை 8,724 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதேபோல், சான்பே தொகுதியில் போட்டியிட்ட அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் ரிங்கி கோல் 76,203 வாக்குகள் பெற்று, எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் கீர்த்தி கோலை 9,587 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு 3,02,279 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் கரம்ஜித் கவுர் சவுதரியை 58,691 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.







