கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றி 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு ஒரு முன்னோட்டம் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. கர்நாடக வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் தோழமை கட்சியான திமுக-விற்கு முதலில் நன்றி. இது கர்நாடகாவின் வெற்றி இல்லை, ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கம். இந்த வெற்றியானது வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம். இந்த வெற்றிக்கு காரணம் எங்கள் கட்சித் தலைவர்களின் பாத யாத்திரை மற்றும் எல்லோருடைய உழைப்பும் தான்.
இந்த வெற்றி இந்தியாவின் வெற்றி. இந்த கர்நாடக தேர்தலில் எந்த பண பலமும் வேலை செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் இது. மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட இனி பாஜக ஊழல் வேலை செய்யாது.
பாஜக ஆட்சியில் கருப்பு பணத்தை ஒழித்ததாக சொல்வது எல்லாம் பொய்யான கருத்து. மேலும் பெட்ரோல் விலை குறைப்போம் என்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
பாஜக-வினர் ஒவ்வொரு மாநிலமாக இழந்து வருகிறது. இந்த வெற்றி, காங்கிரஸ் கூட்டணி பெறப்போகும் வெற்றிக்கு ஒரு முன் உதாரணம்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.







