நாகை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் புதுச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த 40 நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் அவரது மருமகள் கவிதா 36, தனுஷ்கா 12, சுருதிகா வயது 15, அவருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று பெய்த கன மழையில் கூரை வீட்டின் சுவர் மழைநீரில் ஊரிய நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை பூபதியின் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி பூபதி, கவிதா, தனுஷ்கா, சுருதிகா உள்ளிட்ட நான்கு பேரும் சுவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டினர் நான்கு பேரையும் மீட்டு, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி தனுஷ்காவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.







