வாடிவாசலுக்கு தயாராகும் இலங்கை முன்னாள் அமைச்சரின் காளைகள் – காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

இலங்கை முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் பாய தயாராகி வருகின்றன. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள்…

இலங்கை முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் பாய தயாராகி வருகின்றன.

பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து தங்கள் வேட்கையை வெளிப்படுத்துகின்றனர். தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் ஜல்லிக்கட்டுகளில் ஆண்டுதோறும் காளைகளை இறக்கிவிடுபவர்களில் முக்கியமான நபராக செந்தில் தொண்டமான் உள்ளார். இலங்கை காங்கிரஸ் தலைவரான இவர், இதற்கென்றே பிரத்யேகமாக பண்ணை அமைத்து மாடுகளை பராமரித்து வருகிறார்.

இந்த ஆண்டு செந்தில் தொண்டமான் சார்பில் களமிறங்க இருக்கும் காளைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தம்மை தாக்க வந்த புலியை விரட்டி சமூக வலைதளங்களில் பிரபலமான டைகர் எனும் காளையும், அதேபோல பஞ்சாப் எல்லைப்பகுதியில் வாழும் பெரிய கொம்பு கொண்ட காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன.

இந்த காளைகளுக்கு சிவகங்கை அருகே உள்ள செந்தில் தொண்டமானின் தோப்பில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  காளைகள் தங்குவதற்கு மின்விசிறியுடன் கூடிய நவீன அறை, ஜல்லிக்கட்டிற்கு சென்றுவர ஏ.சியுடன் கூடிய கேரவன், ஜல்லிக்கட்டிலிருந்து வெளியேறி காணாமல்போகும் காளைகளை கண்டுபிடிக்க ஜி.பி.எஸ் கருவி என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

20க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவைகளுக்கு காலையில் நடை பயிற்சி, மண்குத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் களம் காணும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருவதுடன் தினமும் காளைகளின் உடல் நிலையை கண்காணிக்க தனியாக கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு முழு பரிசோதனை மேற்கொள்கின்றனர். மேலும் ஒவ்வொரு காளைகளின் உடல்நிலைக்கு ஏற்றவாறு சத்தான உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து செந்தில் தொண்டமான் கூறுகையில், 20 நாட்களுக்கு முன்னதாகவே காளைகளை தயார் செய்ய ஆரம்பித்து விடுவோம். அப்போது பொங்கலின் போது காளைகள் சீறி பாய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

களம் காண காளைகள் தயாராகி வரும் அதேநேரத்தில், மாடுபிடி வீரர்களும் தினசரி பயிற்சிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.  செந்தில் தொண்டமான் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு தனி கவனம் செலுத்தி மாடுகளை வாடிவாசலுக்கு அனுப்பி வரும் நிலையில், டைகர் காளையின் ஆட்டத்தைக் காண  ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சுப்ரமணியன் மற்றும் அன்சர் அலி – நியூஸ் 7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.