ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவையை புறக்கணித்து, திமுக கூட்டணி கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை கூடியது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்த்து முடிந்ததும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊடகத்தினருக்கு தங்களது வணக்கங்களை தெரிவித்தனர். அப்போதிலிருந்தே ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆனால் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் தொடர்ந்து தமிழில் உரையாற்றிக் கொண்டிருந்ததால் ஒரு கட்டத்திற்கு பிறகு திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும், சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமலும் செயல்படும் ஆளுநரை கண்டித்தும், ஆளுநரின் உரையை புறக்கணித்தும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்தின் வாயிலில் நின்றபடி ஆளுநருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால், தமிழகத்தில் நடைபெறும் உயிரிழப்புகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், உரையின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் புறக்கணித்தார் எனவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆளுநர் ஆர்.என்.ரவியை போல இதுவரை எந்த ஆளுநரையும் பார்த்ததில்லை எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டு மக்களுக்கு நேர் எதிர் செயல்பாடுகளில் ஆளுநர் செயல்படுவதால் அவரது உரையை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.
இவரைத்தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தலைவர் சிந்தனைச் செல்வன், ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கொள்கைகளை புகுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.
இதே போல மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, ஆகிய கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலே ஆளுநர் ரவி செயல்படுவதாலும், தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவது குறித்து அவர் பேசியிருப்பதை கண்டித்தும் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் உரைக்கு எதிராக குரல் எழுப்பி, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.











