பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார். ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த இம்ரான் கானை அந்நாட்டின் ரேஞ்சர்ஸ் எனப்படும் அதிரடி படையினர் நீதிமன்றத்தின் ஜன்னல்களை உடைத்து கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இம்ரான் கானை கைது செய்வதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானை, பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர், சாலையில் இழுத்துசென்று வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.
இம்ரான்கான் கைதை தொடர்ந்து, பிடிஐ கட்சியினருக்கும் ரேஞ்சர்ஸ் படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இஸ்லாமாபாத் உள்பட அந்நாட்டின் பல இடங்களில் பிடிஐ கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நாள் பாகிஸ்தான் வரலாற்றில் கருப்பு தினம் என்று பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பாக வீடியோவில் தோன்றி பேசிய இம்ரான் கான், தன் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் எனினும் தன்னை கைது செய்ய பார்ப்பதாகவும், தான் அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









