விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை…

தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செஞ்சுலுவை சங்க தலைவரும், துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். கணினி வழியாக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான வெப்சைட்டை தொடங்கி வைத்த அவர், புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது :

“துணைநிலை ஆளுநராக பல நல்ல விஷயம் செய்து வரும்போது, சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர். அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை.

ஜிப்மரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் முக்கிய பரிசோதனைகளுக்கு மட்டுமே கட்டணம் என ஜிப்மர் அறிவித்தது. இருப்பினும் ஜிப்மர் அறிவித்த கட்டணம் அதிகமாக இருந்ததால் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதன் விளைவாக கட்டணம் மிகவும் குறைக்கப்பட்டு, வசதிபடைத்தோர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. நோயாளிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாது என்றால் எப்படி?

பயணிகள் விமானத்தில் மக்களோடு மக்களாக தான் பயணிக்கிறேன். என்னை பற்றி எழும் விமர்சனங்களை குறித்து எனக்கு கவலை இல்லை. மக்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், மக்கள் பணி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். போராட்டத்தை நடத்தித்தான் தீர்வுகாண வேண்டுமா என கேள்வி கேட்டேன். அதற்காக என்னை எதிர்த்து நடைபெறும் போராட்டம் குறித்து தான் கவலைப்படவில்லை”.

இவ்வாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.