கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விவரங்கள்,
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானத்தை கணக்கிடுகையில், குறிப்பிட்ட இந்த ஐந்து ஆண்டுகளில், 11 கோடியே 32 லட்சம் கூடுதலாக சொத்து குவித்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் சென்னை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வெளிமாநிலங்களிலும் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், உறவினர் மற்றும் பங்குதாரர்கள் பெயரிலும் சொத்து வாங்கி குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி வீட்டில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவதை கண்டித்து அதிமுகவினர் அவரது வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement: