தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், இளைஞரை போல் சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் ஆணி படுக்கை மேல் நின்று சிலம்பம் சுற்றி அசத்தி வருகிறார்.
75-வது வயதிலும் சற்றும் தளராது 2022 ஆணிகள் கொண்ட ஆணி படுக்கையின் மேல் நின்று இரண்டு கைகளில் சிலம்பம், மான் கொம்பு, கர்லா கட்டை, ரங்கராட்டினம் மற்றும் வாள் சுற்றி அசத்துகிறார். சண்முகசுந்தரத்திடம் சிலம்பம் கற்றுக்கொண்ட பலரும், தற்போது வெளிஊர்களிலும், வெளி நாடுகளிலும் மற்றவர்களுக்கு சிலம்பக்கலையை கற்பித்து வருகின்றனர்.
சிலம்பம் மட்டுமின்றி சுருள்வாள், வாள், கந்த கோடாளி, வேல்கம்பு, கராத்தே, சூலாயுதம், ரங்கராட்டினம், மான்கொம்பு, கர்லா கட்டை போன்ற விளையாட்டுகளிலும் கைதேர்ந்த சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசின் பல விருதுகளை சொந்தமாக்கியுள்ளார்.
ஆழ்வார்திருநகரியில் உள்ள பள்ளி மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்து வரும் சண்முகசுந்தரம், சாதிக்க வயது வரம்பு தேவையில்லை என்பதை நிரூபித்து பலருக்கும் முன்னுதாரணமாய் திகழ்ந்து வருகிறார்.








