ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. அவருக்கு…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. அவருக்கு வயது 67.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக இருந்த ஷின்சோ அபே, கடந்த 2006 முதல் 2007 வரையிலும், பின்பு, 2012 முதல் 2020 வரையிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். உடல்நிலை காரணமாக 2020ல் அவர் பதவி விலகினார்.

ஜப்பானின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர் ஷின்சோ அபே.

கடந்த 2 ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்த ஷின்ஷோ அபே, சமீப காலமாக மீண்டும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கத் தொடங்கினார். வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் மேலவை உறுப்பினர் தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது, டெட்சுயா யமகாமி என்ற 41 வயது நபரால் சுடப்பட்டார். உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், ஷின்ஷோ அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷின்ஷோ அபேவை துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமகாமி கைது செய்யப்பட்டுள்ளார். எதற்காக அவர் சுட்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.