ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே (67 வயது).
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபரால் சுடப்பட்டுள்ளது, ஜப்பான் மட்டுமின்றி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டால் ஜப்பான் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகவும், ஜப்பானின் நீண்ட கால பிரதமராகவும் இருந்தவர் ஷின்சோ அபே.
2006ம் ஆண்டு முதல்முறையாக பதவி ஏற்ற அவர், ஓராண்டு காலம் பதவியில் இருந்தார். பின்னர் 2012லிருந்து தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் 2020ல் பதவி விலகினார்.
தனது இளம் வயதிலிருந்து பெருங்குடல் அழற்சியுடன் போராடி வரும் ஷின்சோ அபே, 2007ம் ஆண்டும் இதே காரணத்தினால் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் வளர்ச்சிக்கும்,பாதுகாப்பிற்கும் பெரிய முக்கியத்துவம் அளித்த ஷின்சோ அபே, அதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார்.
2 ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்தவர், சமீப காலமாக மீண்டும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கத் தொடங்கினார். நடைபெறவுள்ள ஜப்பானின் மேலவை உறுப்பினர் தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது மர்ம நபரால் சுடப்பட்டார்.
அவரது பின்புறம் நின்று கொண்டிருந்த நபர் ஷின்சோ அபேவை இரண்டு முறை சுட்டதாகவும், துப்பாக்கி குண்டு அவரது மார்பில் பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல் துறையினர் அவரது துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 40 வயது மதிக்கத்தக்க நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், துப்பாக்கி சூட்டிற்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கைத் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிவரும் சூழலில் இந்த துப்பாக்கி சூடு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஜப்பானில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்களும், அரசியல் காரணங்களுக்காக தாக்குதல் நடப்பதும் அரிதிலும் அரிதான நிகழ்வு.
டோக்கியோவின் முன்னாள் ஆளுநர் யோய்ச்சி மசுசோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஷின்சோ அபே இதய மற்றும் மூச்சு செயலற்ற (Cardiopulmonary arrest) நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஒருவரது மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே, “எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.








