சென்னையின் அடையாளங்களில் ஒன்றான செம்மொழி பூங்காவில் வரபோகிறது பிரமாண்ட கோடை கால பூ கண்காட்சி. 3 நாள் நடக்கும் இந்த பூ கண்காட்சியில் என்னென்ன இருக்கப்போகிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து சற்று ஓய்வெடுத்துக்கொள்ள தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலிருந்து நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு என பல மலை பிரதேசங்களுக்கு மக்கள் செல்வது சராசரியான ஒன்று. இந்நிலையில் நேரமின்மை உட்பட பல காரணங்களால் அங்கு செல்ல இயலாதவர்கள் பலர் இருப்பர். அப்பேர்பட்ட மக்களுக்கு உகந்த இடங்களில் ஒன்றான சென்னையில் மக்களின் கண்களுக்கும், மனதுக்கும் குளிச்சியூட்டும் வகையில் சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மூன்று நாட்களுக்கு பூ கண்காட்சியை தமிழ்நாடு தோட்டக்கலை துறையானது ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையின் மத்தியில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் சுமார் 20,000 சதுர அடியில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பூக்கண்காட்சியில் நீலகிரி, பெங்களூரு, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகைவகையான மலர் உட்பட்ட அறிய வகை செடிகள் மற்றும் மரக்கன்றுகளோடு சுமார் 5,000த்திற்கும் மேற்பட்ட தொட்டிகளுடன் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் அமையவுள்ளது.
அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வரும் சென்னை செம்மொழி பூங்காவில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மலர் கண்காட்சி சென்னை உட்பட புறநகர் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கபெற்ற நிலையில், இந்த மாதம் 3ம் தேதி முதல் நடக்கவிருக்கும் இந்த இரண்டாவது மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட மாணவர்களுக்கு 20 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படபோகிறது. மலை பிரேதசங்களில் இருக்கும் மலர்கண்காட்சியை காண வசூலிக்கும் கட்டணம் போலவே இங்கேயும் கேமராவுக்கு 50 ரூபாய் மற்றும் வீடியோ கேமராவுக்கு 100 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் நடத்தப்படும் இந்த பூ கண்காட்சியில் கிட்டும் வரவேற்ப்பை பொருத்து, சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள செங்காந்தள் பூங்கா, மாதவரத்தில் இருக்கும் செயல் விளக்க பூங்கா மற்றும் வண்ணாரப்பேட்டை பாரம்பரிய பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ந்தேதி சென்னையில் இரண்டாவது முறையாக நடைப்பெறவுள்ள இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, உட்பட்ட பல மலர் சிற்பங்கள், தமிழ்நாட்டு கலாச்சாரத்தை விளக்கும் மலர் அலங்காரங்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சி குறித்த சாதனைகளை விளக்கும் வகையிலான அலங்காரங்கள் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆண்ட்ரு, நியூஸ் 7 தமிழ்











