டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு திரட்டி வரும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்க உள்ளார்.
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்ட உள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் ஜூன் 12 ஆம் தேதி, பாட்னா ஆலோசனைக் கூட்டத்திலும் ஆம் ஆத்மி இடம்பெறும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை வைக்கவில்லை! – சென்னை காவல்துறை விளக்கம்
2024 நாடாளுமன்ற தேர்தல், தேர்தலுக்கான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு நிறைவடைந்தவுடன், சந்திப்பின் சாராம்சம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.







