பிரபல வங்கியில், வயதான வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை திருடி ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியை சேர்ந்த சந்திரமதி, மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பிரபல தனியார் வங்கியில் மூன்று தவணைகளில் 23 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை கணக்கில் செலுத்தி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வங்கியில் இருந்து வருவதாகக் கூறிய நபர் ஒருவர், டெபாசிட் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி சந்திரமதியிடம் 15 லட்சம் ரூபாய்க்கு இரண்டு காசோலைகளை வாங்கியுள்ளார். அதன் பிறகு, இதுகுறித்து கேட்க அந்த நபரை, சந்திரமதி தொடர்பு கொண்டபோது அழைப்புகளை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சந்திரமதி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டபோது, அதுபோன்று யாரையும் வீட்டிற்கு அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரமதி, புளியந்தோப்பு துணை காவல் ஆணையர் ராஜேஷ்கண்ணாவிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சந்திரமதியிடம் வாங்கிய காசோலைகள் வேறு ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு பணப் பரிமாற்றம் செய்யபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹரிகுமார் என்ற நபருக்காக இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஹரிகுமாரையும் போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் வங்கியில் வங்கி மேலாளராக ஹரிக்குமார் பணிபுரிந்ததும், வயதான நபர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.