களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!

நாங்குநேரி களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீ விளைநிலங்களுக்குள் புகுந்ததால், 8,000 வாழைகள்  தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில்…

நாங்குநேரி களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீ விளைநிலங்களுக்குள் புகுந்ததால், 8,000 வாழைகள்  தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம்
அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது களக்காடு
மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது. . இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் ஜூன் 10ம் தேதி கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று பகல் மீண்டும் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. வடகரை வனப்பகுதியில் பற்றிய தீ மள, மளவென பரவி எரிந்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும்
பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் 50க்கும்
மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர கொப்புகளை வைத்து
அடித்தும், மண், கற்களை அள்ளி போட்டு, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில்
தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே காட்டுத்தீ பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர்;எனினும் 8 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைகளும், 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ 15 லட்சம் ஆகும். தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது ஆகும். குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வாழைகள் தீயில் கருகியதால் விவசாயி பால்ராஜ்க்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் பெரும் போராட்டத்திற்கு பின் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. களக்காடு மலையில் பலமுறை காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது தான் முதல் முறையாக வனப்பகுதியில் பற்றிய தீ விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீயினால் நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூபி.கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.