கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணி விரைவுபடுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து குடியிருப்பில் உள்ள அரிசியை விரும்பி உண்ணும் பழக்கத்தை கொண்ட அரிசி ராஜா என்ற தந்தம் இல்லாத PM 2 மக்னா ஆண் காட்டு யானை கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு வாளவயல் குடியிருப்பு பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை இடித்து மூதாட்டி ஒருவரை தாக்கிக் கொன்றது.
மேலும், அப்பகுதியில் உள்ள இரண்டு நபர்களை தாக்கியதில் அவர்கள் பலத்த காயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் யானையை
பிடிக்கும் பணியில் கடந்த 11 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் ஈடுபட்டு வந்த
நிலையில் PM 2 மக்னா யானை கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள்
சென்று மறைந்தது.
இதனை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் PM 2 மக்னா யானை புளியம்பாறை
பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் தென்பட்டது. இதனைத் தொடர்ந்து யானையின்
கால் தடத்தை வைத்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை முண்டக்கொல்லி வனப்பகுதியில் தென்பட்டது.
இதனை அடுத்து வனத்துறையினர் அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது PM 2 மக்னா யானை முண்டக்கொல்லி அடர்ந்த வனப்பகுதியில் தனியாக சுற்றித் திரிவதை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 12 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் pm 2 மக்னா காட்டு யானையை பிடிக்க இரு கால்நடை மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில் 13-வது நாளாக இன்று யானை பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உத்தரவின் படி தமிழக முதன்மை வனப் பாதுகாவலர் அறிவுறுத்தலின்படி சென்னையிலிருந்து மேலும் ஒரு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானையின் தன்மையை அறிந்து வனப்பகுதியிலிருந்து யானையை சமவெளி பகுதிக்கு விரட்டி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.







