#Flood | மலேசியா, தாய்லாந்தை புரட்டிப்போட்ட கனமழை – 30 பேர் பலி

மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த…

#Flood | Heavy rains wreak havoc in Malaysia, Thailand – 30 dead

மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட கடந்த 5 நாட்களில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இதே போல் தெற்கு தாய்லாந்தில் கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. இதற்கிடையே, சில பல பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.