பீகாரில் நடந்த சாலை விபத்தில், மறைந்த நடிகர் சுஷாந்தின் சிங்கின் உறவினர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகாரைச் சேர்ந்த இவர், கடந்த வருடம் மும்பையில் உள்ள தன் வீட்டில் உயிரிழப்பு செய்துகொண்டார். இது பாலிவுட் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பீகாரில் நடந்த சாலை விபத்தில், மறைந்த நடிகர் சுஷாந்தின் சிங்கின் உறவினர்கள் 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
பாட்னாவில் உள்ள ஜமுயி பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் உட்பட 10 பேர், ஒரு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் லக்ஷிசராய் மாவட்டத்தில் உள்ள சிகந்தரா – ஷேக்புரா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வந்துகொண்டிருந்தது.
பிப்ரா கிராமம் அருகே வந்தபோது, வெற்று காஸ் சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரி ஒன்றில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் டிரைவர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள்.
தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.









