வேதாரண்யம் அருகே அதிக அளவு கிடைக்கும் கடல்கொய் மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலம் ஆகும். கோடியக்கரை கடற்கரையில், அவ்வூர் மீனவர்கள் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இன்று காலை கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் கரை திரும்பிய மீனவர்களின் வலைகளில், வழக்கத்தை விட அதிக அளவில் கடல்கொய் மீன், திருக்கை மீன், சிங்கி இறால், நண்டு உள்ளிட்ட பல வகை மீன்கள் பிடிபட்டன.
சுமார் 20 டன் அளவில் கடல்கொய் மீன்கள், 40 கிலோ எடை உள்ள கண்ணாமுழித் திருக்கை, 60 கிலோ எடையுள்ள புள்ளித் திருக்கை உள்ளிட்ட அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட திருக்கை வகை மீன்கள் அதிகளவில் கிடைத்தன.
கடல் கொய் மீன்கள் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஏலம் போனது. இதனை பெரும்பாலும், மீன் எண்ணெய் தயாரிக்கவும் கோழித் தீவனம் தயாரிக்கவும் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் மற்றும் திருக்கை மீன்களை வெளிமாநில வியாபாரிகள் ஏலம் எடுத்துச் சென்றனர். இந்த மீன்பிடி காலத்தில், மீன் வரத்து அதிகரிப்பாலும், நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—-சௌம்யா.மோ







