தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்று பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்
கல்லூரியில் நடைபெறும் கட்டுமானப் பணியில் பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட்,
உத்திரப்பிரதேசம், ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்து 1,150 க்கும் மேற்பட்ட
வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் நடைபெற்ற
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை
அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் கூறுகையில், வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி வேலைகள் மேற்கொள்ள வேண்டும். வடமாநில தொழிலாளர்கள்
நீலகிரியில் பாதுகாப்புடன், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி, பாதுகாப்பான
தங்கும் இடம் போன்றவற்றுடன் சுதந்திரமாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.
இதையும் படிக்க: உடலில் கட்டி கொண்டு வரப்பட்ட ரூ.68 லட்சம் ஹவாலா பணம்- இருவர் கைது
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை
தோட்டம் உட்பட பிற தொழில்களில் சுமார் 14,000 தொழிலாளர்கள் பாதுகாப்பாக
பணியாற்றி வருகின்றனர். 1250 குழந்தைகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்
அங்கன்வாடி பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் முழு பாதுகாப்பு இருப்பதால்தான் தங்கள் குழந்தைகளுடன் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தங்கி பாதுகாப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா