மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது என வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாலர்களை சந்தித்து பேசிய அவர், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்று உள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நாளை காலை வரை தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் நகரக்கூடும் பின்னர் தமிழகம் கேரள பகுதிகளை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும் என்றார்.
மேலும், ‘கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் மூன்று தினங்களை பொறுத்தவரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன், கனமழையை பொருத்தவரை கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இன்றும் நாளையும் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறினார்.

மேலும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இன்றும் நாளையும் கன முதல் மிக கனவழை பெய்யக்கூடும். நேற்று தமிழகத்தில் ரெட் அலர்ட் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அது திரும்ப பெறப்படுகிறது. கடலூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் 3 தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றர்.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 247 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது .இயல்பாக 254 மில்லி மீட்டர் பதிவாகும் 3% சதவீதம் இயல்பை விட குறைவு. சென்னையில் பதிவான அளவு 509 மில்லி மீட்டர், இயல்பான அளவு 424 மில்லி மீட்டர் இது இயல்பை விட 20% அதிகம் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன் பேசினார்.







