மதுரை வந்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திண்டுக்கல் சென்றார். பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிழும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக பெங்களூரில் இருந்து விமானப்படை விமானம் மூலம் அவர் பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆர் பி உதயகுமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், தேனி எம்பி ரவீந்திரநாத் ராஜ்யசபா எம்பி தர்மர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரமர் மோடி திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல்லில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, திண்டுக்கல்லில் இருந்து பட்டமளிப்பு விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி காரில் சென்றார். அப்போது, வழி நெடுகிழும் பிரதமருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் காரில் கதவை திறந்தவாறு சென்ற பிரதமர், சாலைகளின் இருபுறமும் குவிந்து நின்ற தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் கைகாட்டியவாறே சென்றார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். மேலும் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். மோடியின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.









