5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து லோகேஷ் ராகுல் விலகியதை அடுத்து, ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 29 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். துணை கேப்டன் ஹார்திக் பாண்டியா 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இவ்வாறாக 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை இந்தியா எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மஹராஜ், நார்ட்ஜே, பார்னெல், பிரெடோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். எனினும், அக்சர் பந்துவீச்சில் இஷான் கிஷனிடம் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.
கேப்டன் பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, அடுத்து களம் கண்ட டுவைன் பிரிடோரியஸும் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த டுசனும், அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதற விட்டனர். சிக்சர் மற்றும் பவுண்டரிகளை இந்த ஜோடி விளாசியது.
இரண்டு அரை சதம் பதிவு செய்தவுடன் அந்த அணிக்கு நம்பிக்கை பிரகாசமானது. இவ்வாறாக 19.1 ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.
இதையும் படியுங்கள்: இலங்கைக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு
டேவிட் மில்லர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது டி20 ஆட்டம் வரும் 12ம் தேதி கட்டாக்கில் நடைபெறவுள்ளது.
-மணிகண்டன்