“முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி

வாக்குத் திருட்டு. அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு ஆகியவை நமது ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறிவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக ‘அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், ‘மலர்கள் மற்றும் புல்’ சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “முதலில் சிவசேனா, பிறகு என்.சி.பி (NCP), இப்போது திரிணாமுல் காங்கிரஸ்.

ஒவ்வொரு முறையும் அதே பாணிதான் – பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து ஒரு கட்சியை உடைக்கின்றன. பின்னர் அதன் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.

ஒரு முழு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகள் திருடப்படுவதும் ஆச்சரியமான விஷயமல்ல.

வாக்குத் திருட்டு. அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு – இவை நமது ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறிவிட்டன.

மக்கள் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு – ஆனால் அதற்கு மாறாக, மக்களின் முடிவையே சீர்குலைக்கும் சக்திகளுக்கு அது உதவி செய்கிறது.

இந்தப் போராட்டம் பானர்ஜி அவர்களுடையது மட்டுமல்ல. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சியின், ஒவ்வொரு வாக்காளரின் போராட்டமும் ஆகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.