முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.…

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. திருவனந்தபுரத்தில் கிரீன்ஃபீல்டு இன்டர்னேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், குவாஹாட்டியில் நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றது.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டது.

இந்நிலையில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி எதிர்கொள்கிறது. அதன்படி முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக டக்-ஒர்த் விதியின் படி 40 ஓவர்களாக இந்த ஆட்டம் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 74 ரன்களும், மில்லர் 75 ரன்களும் எடுத்தனர்.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.55 மணி நிலவரப்படி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 76  ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ஷிக்கர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட்,  இஷான் கிஷன் ஆகியோர் வெளியேறிய நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.