கம்போடியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் – கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பதாகவும், அவர்களுக்கு உணவு மறுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   திருச்சி விமான நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, சையது இப்ராகிம் நேற்று கூறுகையில்,…

கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பதாகவும், அவர்களுக்கு உணவு மறுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திருச்சி விமான நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, சையது இப்ராகிம் நேற்று கூறுகையில், கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து, வணிக விசாவில் கம்போடியா நாட்டிற்கு சென்றேன். திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள நிறுவனத்தினர் அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்று விட்டார். அங்கு தனக்கு உரிய வேலை கொடுக்கப்படவில்லை. ஆயிரம் டாலர் சம்பளம் என்று கூறினர். ஆனால், கொடுக்கவில்லை.

 

திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். ஏதேனும் உதவி என்று கேட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுகுறித்து முதலில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்டிபிஐ கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன் என்று தெரிவித்தார்.

மேலும், கம்போடியாவில் தமிழர்கள் துன்புறுத்தப்படும் வீடியோ தன்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர். இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது இந்திய தூதரக அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் :

 

இதனிடையே, கம்போடியாவில் தமிழர்கள் சிக்கி தவிப்பதையும், அது தொடர்பாக அங்கிருந்து திரும்பிய சையது இப்ராகிம் தெரிவித்த கருத்துக்களும் நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் பகுதியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேட்டியளித்த சையது இப்ராகிம் தமிழ்நாட்டை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கிதவிப்பதாக கூறினார். அவர்களுக்கு உணவு, குடிநீர், மின்சார வசதி எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சாலையோரங்களில் சிலர் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஏற்கனவே, தாய்லாந்தில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு உதவியது. அந்த வகையில் கம்போடியாவில் தற்போது சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு முயற்சி எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தலையிட்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அறச்சீற்றம் நிகழ்ச்சி வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.