சீக்கியர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை கங்கனா சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக் கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் பல பிரச்னைகளை அவர் சந்தித்து வருகிறார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், நடிகை கங்கனா அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து சீக்கியர்கள் அமைப்பு சார்பில் அவர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், கங்கனா உள்நோக்கத்துடன் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரிவித்ததாகவும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கியதாகவும் அவதூறாகக் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீலையும் சந்தித்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் மும்பை கர் போலீசார், கங்கனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.








