நாடு முழுவதும் பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,84,372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது, 1027 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நகரங்களில் ஊரடங்குகளும், தட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உலக வங்கியில் தலைவர் டேவிட் டேவிட் மால்ப்பஸுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். அதில், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக கடனை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா இரண்டாவது அலைப் பரவலை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை நிதியமைச்சர் பட்டியலிட்டார். சோதனை, தடமறிதல், சிகிச்சையளித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றையும் குறிப்பிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் இந்தியா தெளிவாக இருப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், “பொருளாதாரம் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. உள்ளூர் அளவில் சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்கவுள்ளோம்” எனவும் கூறினார்.







