அதிமுகவை அவமதிக்கும் நோக்கோடு, பேரவையில் இருந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியே செல்ல வில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்தநாளான 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, 21, 22, 23 அகிய தேதிகளில் கேள்வி நேரம் நடைப்பெற்றது. தொடர்ந்து நடந்து வரும் சட்டமன்ற கூட்ததில் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டம் கூடி நேரமில்லா நேரம் நடைபெற்றது.
சட்டப்பேரவை கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளியே சென்றதால், பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு விளக்கமளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஓ.பன்னீர்செல்வம் பேசுவதை கேட்கக்கூடாது என்பதற்காக வெளியேறவில்லை என்றும், பணி நிமித்தமாகவே வெளியே சென்றதாகவும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார்.
மேலும், எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வது குறித்து விமர்சிக்கும் வகையில் பேசிய தனது பேச்சை, தாமே திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவித்தார். முதலமைச்சரை புகழ்வதற்காக வேளாண் துறை அமைச்சர் பயன்படுத்திய வார்த்தையும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.







