தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இன்று முதன்முறை அரசு பயணமாக அபுதாபி செல்லும் நிலையில், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 2021 மே7ல் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், முதன்முறையாக மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிகாண அபுதாபி செல்கிறார்.
பட்ஜெட் மீதான பதிலுரைக்காக இன்று பேரவை கூடிய நிலையில், முதலமைச்சரின் அபுதாபி பயணத்துக்கு அவை முன்னவர் துரைமுருகன், ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.
அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த அபிமானத்தைப் பெற்று, இந்திய துணைக்கண்டத்தை திரும்பி பார்க்க வைத்த முதலமைச்சர், தானே முன் வந்து அடியெடுத்து கடல் கடந்து இன்றைய தினம் துபாய் செல்வதாகவும், தொழிலதிபர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவிருப்பது உலகச்செய்தி என்றும் பேசினார்.
மேலும், அனைத்துத்துறைகளிலும் 10 மாத காலத்தில் 100 ஆண்டு அனுபவத்தோடு செயல்படுவதைப்போல முதலமைச்சர் செயல்பட்டுள்ளதாக பாராட்டிய துரைமுருகன்,
தலைவர் கலைஞர் இருந்திருந்தால், முதலமைச்சரின் செயலுக்கு தனது கண்ணீரை வடித்து துடைத்து பார்ப்பார் என்பதை தாம் எண்ணிப்பார்ப்பதாகவும் பேசினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரே உங்கள் பயணம் வெற்றி பெற வேண்டும், உலகப்புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக பேசிய சபாநாயகர் அப்பாவு, உலகின் பல நாடுகளில் செஸ் போட்டி நடைபெற்றிருந்தாலும், அதை இந்தியாவில் நடத்த முடிவு செய்த போது அவர்களின் தேர்வாக இருந்தது தமிழ்நாடுதான் என்றும், அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு உகந்த சூழல் இந்த ஆட்சியில் இருப்பதாகவும் அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இதன் மூலம் 10 மாத கால ஆட்சி இந்தளவுக்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் பாராட்டி உரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், உலகிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதலமைச்சருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டார்.
உலகத் தமிழ் மக்களுக்கு நான் இருக்கிறேன் என்று வெளிநாடு வாழ் தமிழர்களை முதலமைச்சர் பாதுகாத்து வருவதாகவும், அவரின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் கொ.ம.தே.க. எம்எல்ஏ, ஈஸ்வரன் பாராட்டினார்.
தமிழ்நாட்டின் முதலீட்டுக்கு பலம் சேர்க்கும் வகையில் வெளிநாடு செல்லும் முதலமைச்சரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், தமது சார்பிலும் வாழ்த்தி வழியனுப்புவதாக சி.பி.எம், எம்எல்ஏ நாகை மாலி பேசினார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணியும் பேரவையில் பேசினார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், அவை முன்னவர், அரசியல் கட்சி தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பேரவையிலேயே முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.







