இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.
இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட் ஆனார். 3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர். இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.







